400 கிலோ கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
ேதவகோட்டையில் 400 கிலோ கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
ேதவகோட்டையில் 400 கிலோ கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் சோதனை
தமிழக அரசு அறிவித்துள்ள போதை பொருள் இல்லா தமிழகம் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேவகோட்டை நகரில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி, தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் மேற்பார்வையில் தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், சண்முகவேல் மற்றும் போலீசார் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
அப்போது தேவகோட்டை அருகே உள்ள இடையன் வயலை சேர்ந்த செந்தில் என்பவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள சையது இம்ரான்கான் என்பவரிடமிருந்து வாங்கி வந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிவகங்கை தர்மர் கோவில் தெருவில் உள்ள சையது இம்ரான்கான் என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் அங்கு சென்றபோது புகையிலை பொருட்களை விற்பனைக்காக ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்த சையது இம்ரான்கான், அவருக்கு உடந்தையாக இருந்த வாசு, ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் ராசு மற்றும் தேவகோட்டையில் புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்த செந்தில், முருகன் அகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 400 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.