அண்ணா பல்கலைக்கழக உணவகத்தில் தன்னை திட்டிய மேலாளரை பழிவாங்க ஊழியர் செய்த செயல்..!
அண்ணா பல்கலைக்கழக உணவகத்தில் தன்னை திட்டிய மேலாளரை பழிவாங்க லேப்டாப்பை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் ஒன்று உள்ளது. அதில் மேலாளராக வேலை செய்பவர் ராஜ்குமார். உணவகத்தில் வைத்திருந்த இவரது லேப்டாப் திருட்டு போய் விட்டது.
இது குறித்து ராஜ்குமார் கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மேற்படி உணவகத்தில் வேலை செய்து வந்த ஊழியர் பிபுல்தாஸ் (வயது 36) என்பவர் தான் லேப்டாப்பை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிபுல்தாஸை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லேப்டாப்பை மீட்டனர்.
மேலும் கைதான பிபுல்தாஸ் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மேலாளர் ராஜ்குமார் தன்னை அடிக்கடி திட்டியதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் லேப்டாப்பை திருடியதாகவும், கைதான பிபுல்தாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.