போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கண்டக்டர் திடீர் தர்ணா

நாகர்கோவிலில் போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ் கண்டக்டா் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-08-16 20:04 GMT

நாகர்கோவில்,:

நாகர்கோவிலில் போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பஸ் கண்டக்டா் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கண்டக்டர் திடீர் தர்ணா

தெங்கம்புதூர் ஒசரவிளையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 31), பஸ் கண்டக்டர். இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தா்ணா போராட்டம் நடத்தினார். இதைப் பார்த்த போலீசார் உடனே அங்கு சென்று ஜெகனை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, "நான் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு நாகர்கோவில்- காற்றாடிவிளை வழிதடத்தில் பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் என்னை திடீரென அந்த வழிதடத்தில் பணியாற்ற கூடாது என்று கூறினர். இதுதொடர்பாக கேட்டபோது போக்குவரத்து அதிகாரி ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார். கொலை மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

போலீசார் எச்சரிக்கை

அதோடு தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை போலீசாரிடம் அளித்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த கூடாது என்றும் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பஸ் கண்டக்டர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்