1,374 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது: 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
1,374 வாக்குச்சாவடிகளிலும் அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.;
திருத்தம் பணி
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாளை(வெள்ளிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்க உள்ளது. 2024 ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.
தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.
சிறப்பு முகாம்
வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1374 வாக்குச்சாவடிகளிலும் அடுத்தமாதம் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். எனவே, இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.