அரசு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்துங்கள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்துங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை சராசரியாக 50 முதல் 60 சதவீதம் பெறும் வகையில் மாணவ-மாணவிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி கல்வித்தரத்தை உயர்த்த அறிவுரை வழங்க வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு எந்த பாடம் புரியவில்லை என்பதை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றி மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விதத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.