மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 10 இடங்களில் மறியல்:1,015 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து தேனி உள்பட 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 1,015 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 18:45 GMT

சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, கூடலூர், கம்பம், சின்னமனூர், கோம்பை, தேவாரம், போடி ஆகிய 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தேனியில் நடந்த மறியலுக்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். இதற்காக அக்கட்சியினர் சுப்பன்தெருவில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலைக்கு ஊர்வலமாக வந்தனர். அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1,015 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தலைமையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு உள்ள எல்.எப். மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட 252 பேரை கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல், கோம்பையில் 72 பேர், ஆண்டிப்பட்டியில் 74 பேர், பெரியகுளத்தில் 80 பேர், தேவாரத்தில் 62 பேர், போடியில் 100 பேர், கூடலூரில் 55 பேர், சின்னமனூரில் 205 பேர், கடமலைக்குண்டுவில் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் 10 இடங்களில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மொத்தம் 1,015 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 390 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்