தமிழக அரசை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்புமாநகரில் காலை நேரத்தில் தடையின்றி மது கிடைப்பதாக புகார்

தமிழக அரசை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா் மாநகரில் காலை நேரத்தில் தடையின்றி மது கிடைப்பதாக புகார் தொிவித்தனா்

Update: 2023-05-30 21:10 GMT

தமிழக அரசை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் காலை நேரத்தில் மாநகராட்சி பகுதியில் தடையின்றி மது கிடைப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மன்றத்தில் சாதாரண கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் வி.செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி திருநகர் காலனி நடுநிலைப்பள்ளிக்கூடத்தை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது, தேர்தலின் போது வாக்காளர்கள் விழிப்புணர்வு மற்றும் வசதிகளுக்கான பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நிதி ஒதுக்க அனுமதி உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் வார்டு வாரியாக தங்கள் பகுதி பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினார்கள்.

பூங்கா

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் 2 அல்லது 3 பூங்காக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பராமரிப்பு இல்லாமல் வீணாகிக்கொண்டு உள்ளன. பொதுமக்களும் பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது. எனவே பூங்காக்களை திறந்து பூட்டி, பராமரிக்க ஆட்கள் நியமிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நமது கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களின் எந்த கோரிக்கையையும் அவர்கள் சரி செய்வது இல்லை.

பாதாள சாக்கடை

இதுபோல் பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை சாலைகளில் ஓடுகிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு உரிய அதிகாரிகள் எந்த மரியாதையும் அளிப்பதில்லை. கோரிக்கையையும் நிறைவேற்றுவதில்லை. பாதாள சாக்கடை திட்ட அதிகாரி மாநகராட்சி முழுமைக்கும் ஒருவர் என்பதை மாற்றி மண்டலம் வாரியாக ஒருவர் வீதம் நியமிக்க வேண்டும்.

சில இடங்களில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு சாலையில் பொங்கி வழிவது தெரியாமல் இருக்க, பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து வேறு குழாய் அமைத்து திறந்தவெளி சாக்கடைகளில் கழிவுகளை விடுகிறார்கள். இது பாதாள சாக்கடை திட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்குகள் பல இடங்களில் இல்லை. பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேபி கால்வாய்

காலிங்கராயன் வாய்க்காலையொட்டி அமைக்கப்பட்டு உள்ள பேபி (துணை) கால்வாயில் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியையொட்டி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே பேபி கால்வாயை சுத்தப்படுத்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மூலப்பட்டறையில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாலையோரத்தில் கம்பங்கள் நடுவதுடன், கல்-மண் ஆகியவற்றையும் சாலையில் போட்டு விட்டு செல்கிறார்கள். இது பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

தண்ணீர் திறப்பு

மாநகராட்சியில் தண்ணீர் திறக்கும் பணியாளர்கள் சீரான நேரத்தில் தண்ணீர் திறப்பது இல்லை. காலை, மாலை என்று அவர்கள் விருப்பம்போல செயல்படுகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்துதான் இந்த பணியாளர்களின் நடவடிக்கை இப்படி இருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பணியாளர்கள் இனிமேலும் அவ்வாறு செய்யாமல், பொதுமக்கள் சிரமமின்றி தண்ணீர் எடுக்க வசதியாக குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க அறிவுறுத்த வேண்டும்.

மண்டல கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பொது கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அங்குள்ள பள்ளிக்கூட வளாகத்தை பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும்.

மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் உதவியாளர்களாக பணியாற்றும் தற்காலிக (குழு மற்றும் தூய்மை) பணியாளர்களை அந்தந்த அலுவலக பணியாளர்கள் கணக்கில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது தாராளம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் காலை நேரத்திலேயே மது வகைகள் தாரளமாக கிடைக்கிறது.

தமிழ்நாடு அரசு மதுவிற்பனைக்கு நேரம் கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் கண்டுகாள்ளாமல் காலை, இரவு எந்த நேரத்திலும் மது தாராளமாக கிடைக்கிறது. இதற்கு மாநகராட்சி ஏதேனும் அனுமதி வழங்கி உள்ளதா?.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

அப்போது அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ஜெகதீசன் பேசும்போது, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் நடமாட்டத்தை தடுக்க முடியாமலும், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க தவறிய விடியா அரசை கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார். அவரது பேச்சுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விடியா அரசு என்பதை அவர் திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினார்கள். ஒரு சிலர் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்து ஆக்ரோஷமாக பேசினார்கள். பின்னர் அவர், தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளியேறினார். அவருடன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, கவுன்சிலர்கள் தங்கவேலு, நிர்மலாதேவி பழனிசாமி, ஹேமலதா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பி.கே.பழனிசாமி, காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணியம், சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி, கவுன்சிலர்கள் ஆதி கே.ஸ்ரீதர், கோகிலவாணி, செல்லப்பொன்னி, ஈ.பி.ரவி, நந்தகோபு, குணசேகரன், மணிகண்டராஜா, டி.குமரவேல் உள்பட பலரும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

நடவடிக்கை

அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பதில் அளித்து பேசினார்.

அவர் பேசும்போது, பூங்காக்களை பராமரிக்க குழுக்கள், தன்னார்வஅமைப்புகள் முன்வந்தால் அனுமதி அளிக்கப்படும். அப்படி வராத பட்சத்தில் பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் அமைப்பதற்கு முதற்கட்ட டெண்டர் அனுமதிக்கப்பட்டு உள்ளது. விரைவில் பொருத்தும் பணிகள் தொடங்கும். தெருநாய்களை பிடிக்க விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்து, மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குனரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் வினியோகம் தடைபடாமல் இருக்க தனியாக மின்மாற்றி மற்றும் ஜெனரேட்டர் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

ஈரோடு மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள துணை ஆணையாளர் கே.எம்.சுதா, உதவி ஆணையாளர்கள் விஜயா, சண்முகவடிவு, குமரேசன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்