தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணி வழங்கக்கோரி நேற்று காலை திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் கோட்டத்தில் அடங்கிய திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய நெடுஞ்சாலைத்துறை ஊரக கிராம சாலை, கரும்பு சாலை போன்ற இடங்களில் பணி செய்த என்.எம்.ஆர் பணியாளர்களை 1997-ல் தி.மு.க ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதில் விடுபட்ட என்.எம்.ஆர் பணியாளர்களை பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் வேலை கேட்டு பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நடந்துக்கொண்டிருக்கிறது.
ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் காலி பணியிடங்களை கணக்கெடுத்ததில் 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் கோட்டத்தில் காலி பணியிடங்களில் ஏற்கனவே வேலை செய்து வழக்கில் இருக்கும் பணியாளர்களுக்கு பணி வழங்கவும், அவர்களை நிரந்தரம் செய்யவும் வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.