ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை கண்டித்து பவானிசாகரில் அனைத்து கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

பவானி ஆற்று தண்ணீரில் ஆலை கழிவுகள் கலப்பதால் பவானிசாகர் அணையின் தண்ணீர் மாசுபடுவதை கண்டித்து பவானிசாகரில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனா்.

Update: 2023-06-05 21:12 GMT

பவானிசாகர்

பவானி ஆற்று தண்ணீரில் ஆலை கழிவுகள் கலப்பதால் பவானிசாகர் அணையின் தண்ணீர் மாசுபடுவதை கண்டித்து பவானிசாகரில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் பில்லூர் மற்றும் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

கருமை நிறமாக மாறிய நீர்

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அப்போது அணை அருகே கீழ்பவானி வாய்க்காலில் தேங்கி நின்ற தண்ணீரில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பவானிசாகர் அணையின் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளை சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென கடந்த மாதம் 10-ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி அடுத்த கட்டமாக ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இதைத்தொடர்ந்து பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பேசினார். போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுடர் நடராஜ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை குறித்த மனுவை போராட்டக்குழுவினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். போராட்டத்தையொட்டி பவானிசாகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்