தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,667 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,667 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 19:45 GMT

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வுகள் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 8 அமர்வுகளிலும், லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம், முசிறி, மணப்பாறை, தொட்டியம் ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வும் என 14 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் உள்பட மொத்தம் 11 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இதில் 3,667 வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.14 கோடியே 66 லட்சத்து 9 ஆயிரத்து 234 இழப்பீடாக வழங்கப்பட்டது. முன்னதாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய பாபு தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட நீதிபதி செல்வமுத்துக்குமாரி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மற்றும் அனைத்து மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய (பொறுப்பு) சோமசுந்தரம் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்