ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் போராட்டம்
நெல்லையில் ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கணினி உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு கணினி உதவியாளர் பணியாற்றி வருகிறார். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு கணினி உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈஸ்வரமூர்த்தி, ஜாஸ்மின் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.