அரசு பஸ்சில் மாணவர்களிடம் கட்டாய பயணச்சீட்டு
ஆலங்குடி அருகே அரசு பஸ்சில் மாணவர்களிடம் கட்டாய பயணச்சீட்டு வாங்க கூறி நடுவழியில் இறக்கி விட்டதால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்
ஆலங்குடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆலங்குடி நகரில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆலங்குடியில் தற்போது கலை, அறிவியல் கல்லூரியும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆலங்குடியிலிருந்து கே.ராசியமங்கலம் வழியாக சென்ற அரசு நகர பஸ் கொரோனா காலகட்டத்தில், கே.ராசியமங்கலம் வழியாக செல்லாமல் ஆலங்குடியிலிருந்து வெட்டன்விடுதி வழியாக கறம்பக்குடி வரை இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாணவ-மாணவிகள் இந்த நகர பஸ்சில் சென்று வந்தனர்.
டிக்கெட் எடுக்க வேண்டும்
இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அரசு நகர பஸ் மீண்டும் கே.ராசியமங்கலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பாப்பான்விடுதிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளார்கள்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆலங்குடி பஸ் பணிமனை மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அப்போது, பணிமனை மேலாளர் அவ்வழியாக செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் போது டிக்கெட் எடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மறியல் போராட்டம்
அப்போது கண்டக்டர்மற்றும் டிரைவர் பயணச்சீட்டு வாங்காமல் ஏறக்கூடாது என ஆலங்குடி அடுத்த பாப்பான்விடுதியில் மாணவர்களை நடுவழியில் இறக்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி மற்றும் போலீசார், அரசு பணிமனை அதிகாரி மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரி உடனடியாக இன்றோ அல்லது நாளையோ பயணச்சீட்டு வாங்காமல் அரசு பஸ்சில் பள்ளி மாணவ ர்கள் பயணம் செய்யலாம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பள்ளி மாணவ- மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.