தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - காந்தியவாதி விவேகானந்தன் பேட்டி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தன் கூறினார்.;
காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் விவசாயிகள், தொழில் முனைவோர், வயதானோர், பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள், விபத்துகளில் சிக்கியோர் என பலருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. புதிய சாலைகள், பாலங்கள், கல்லூரிகள், சுகாதார வளாகம், நான்குவழி, விரைவு சாலைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் என நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவதை போல் நாட்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள், உயிர் பலிகள், ஆபத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மதுவை ருசித்து அதற்கு அடிமையாகும் ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது. காந்தியவாதிகள் கேட்பதெல்லாம் பூரண மதுவிலக்கு கொள்கை அமலாவது மட்டுமே. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் அனைத்தையும் மறந்து மக்கள் அரசை நிந்திப்பது இந்த மது கடைகளால் சாதாரண மக்களும், சான்றோர் பெருமக்களும் வருந்துகின்ற பொது விஷயம் மதுக்கடைகளை வீதிகள் தோறும் திறந்து வைப்பதே. இதன் மூலம் குற்றங்கள் அதிகரிக்கிறது. எனவே அரசு மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
மது கடைகளால் வருவாய் வருகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுக்கடைகளை மூடினால் இன்னும் வருவாய் அதிகரிக்கும். எப்படி என்றால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். சாவுகளின் எண்ணிக்கை குறையும் எனவே தமிழக அரசு உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவர் அவர் கூறினார்.பேட்டியின் போது ஓய்வுபெற்ற தாசில்தார் முத்துசாமி, திருமாறன் டாக்டர் ஏகலைவன் ஆகியோர் உடன் இருந்தனர்.