வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்திருப்பதாக போலீசில் புகார்
பாணாரவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்திருப்தாகவும், அவர்களை மீட்கக்கோரியும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
பாணாவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்துவைத்து இரண்டு மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக, தப்பி வந்த தொழிலாளர்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமரா் 35-க்கும் மேற்ப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
அடைத்து வைத்துள்ளனர்
இந்தநிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்ளுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே வடமாநில தொழிலாளர்களில் 5 பேர் நேற்று முன்தினம் மாலை காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தபோது மீதம் இருந்த 27 தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே பூட்டி வைத்துள்ளதாகவும், அவர்களை வெளியே அனுப்ப மறுப்பதாவும், வெளியே சென்ற தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வந்துள்ள கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த நரசிம்மகவுடா பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தங்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் தரவேண்டிய மாத ஊதியத்தை வழங்கவும், தொழிற்சாலையில் அடைத்து வைத்திருக்கும் 27-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.