புதுக்கோட்டையில் இரட்டைக் குவளை முறை; டீக்கடை உரிமையாளர் கைது - மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை

கிராம மக்களை நேரடியாக ஐயனார் கோவிலுக்கு அழைத்துச் சென்று மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழிபட்டார்.

Update: 2022-12-27 17:10 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாகவும், அப்பகுதி மக்கள் சிலருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கிராம மக்கள் நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிச் சென்று பார்த்த போது, அந்த தண்ணீரில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

மேலும் அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்து, சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அங்குள்ள ஒரு டீக்கடையில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படுவதாகவும், அங்குள்ள ஐயனார் கோவிலில் தங்களை அனுமதிக்க மறுப்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அப்பகுதி மக்களை நேரடியாக கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட்டார். அவர்களை உள்ளே நுழைய விடாமல் சாமியாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் டீக்கடையில் இரட்டைக் குவளை முறையை பயன்படுத்திய மூக்கையா என்பவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்