பாறையில் வெடி வைத்து உடைத்து கற்கள் திருடுவதாக புகார்

நார்த்தாமலையில் பாறையில் வெடி வைத்து உடைத்து கற்கள் திருடுவதாக புகார் அளித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-02-27 18:08 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் நார்த்தாமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ``நார்த்தாமலையில் அரசு புறம்போக்கு பாறையில் வெடி வைத்து உடைத்து, அதில் இருந்து கற்களை எடுத்து திருடப்படுகிறது. இதன் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிடாரியம்மன் கோவிலும், தொல்லியல் துறை சார்ந்த கோவில்களும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவோம்'' என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் கடந்த 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி இணைக்கப்பட்டது. இந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

345 மனுக்கள்

இதேபோல முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்பட மொத்தம் 345 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் 5 நபர்களுக்கும், தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி 5 நபர்களுக்கும், தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடன் மானியம் 5 நபர்களுக்கும், ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் அரசின் திட்டத்தில் 5 சதவீத முன்வைப்புத் தொகையும் உள்பட 17 பேருக்கு ரூ.3,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதிகாரிகள்

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாட்சா, துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்