பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக புகார்: டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம்
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக புகாரின் பேரில், டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் கந்தசாமி (வயது 45) என்பவர் மதுப்பிரியர்களிடம் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் நடத்திய விசாரணையில் அவர் கூடுதலாக ரூ.10 வசூலித்தது தெரியவந்தது. இதனால் அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.