'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகளுக்கு இடையூறு
உத்தமபாளையம் பஸ் நிலையத்தில் வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ்களும் அதற்கான நடைமேடைகளில் நிறுத்தி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
பழனியை அடுத்த மானூர் தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயில் இருந்து வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.
-மாரிமுத்து, மானூர்.
சேதமடைந்து வரும் மின்கம்பம்
ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டி அருந்ததியர் காலனியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே மாற்ற வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
குண்டும், குழியுமான தார்சாலை
திண்டுக்கல்லை அடுத்த ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி கொண்டமநாயக்கனூரில் இருந்து செங்குளத்துப்பட்டிக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
திண்டுக்கல்-வெள்ளோடு சாலையில் மஞ்சளடி பிரிவு அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் காற்றில் பரப்பதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ் பிரியன், திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அதிகாலையில் அந்த வழியாக நடைபயிற்சி செய்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், திண்டுக்கல்.
புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்
மயிலாடும்பாறை அருகே நேருஜிநகரில் இருந்து சிறப்பாறை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விழுந்ததால் சாலை தற்போது மண்பாதையாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சிறப்பாறை.
பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை
வருசநாடு பஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கழிப்பறை தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விரைவில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-குமார், வருசநாடு.
மீண்டும் நிழற்குடை வேண்டும்
கம்பம் பழைய தபால் அலுவலகம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலை பணிகளை விரைந்து முடித்து பஸ் நிறுத்த பகுதியில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-சேக் பரித், கம்பம்.
புதர்மண்டி கிடக்கும் பாதை
கம்பம் ஏலரசு பகுதியில் உள்ள நெல்களத்தில் இருந்து வீரப்பநாயக்கன் குளக்கரை வரை உள்ள பாதையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பையா, கம்பம்.
--------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
--------------