வேகத்தடை அவசியம்
கன்னியாகுமரியில் இருந்து புத்தளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் மற்றும் ஈத்தன்காட்டில் இருந்து சாமிதோப்பு வழியாக கீழ மணக்குடி செல்லும் நெடுஞ்சாலையும் வெங்கலராஜபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகில் சந்திக்கின்றன. இந்த சந்திப்பு மிக குறுகிய பகுதியாகும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. பள்ளி அருகில் உள்ளதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் ேவகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
முழுக்கோடு ஊராட்சியில் உத்திரம்கோடு கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருந்து வித்தறுத்தான்விளைக்கு செல்லும் சாலைஉள்ளது. இந்த சாைலயோரத்தில் மண்மேட்டின் மீது பிளாஸ்டிக் தண்ணீர் டேங்க், அதன் அருகில் மின்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்மேட்டை ஆக்கிரமித்து மண் எடுத்தால் தண்ணீர் டேங்க் மற்றும் மின்கம்பமும் சாலையில் சரிந்து விழும் அபாயம் நிலையில் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் டேங்கோ, மின்கம்பமோ எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் டேங்க், மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனில்குமார், முழுக்கோடு.
எரியாத மின்விளக்கு
புத்தளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உசரவிளையில் வளைவான பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், பஸ்கள் திரும்பும் பகுதி என்பதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணகுமார், உசரவிளை.
சீரமைக்கப்படுமா?
தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை சிவன்கோவில் சாலையில் ஊசிக்கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கிணற்றிற்குள் செடிகள் வளர்ந்தும், அதன் சுற்றுச்சுவர் சேதமடைந்தும் காணப்படுகிறது. எனவே, கிணற்றிற்குள் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், சுற்றுச்சுவரையும் சீரமைத்து தண்ணீரை சுகாதாரத்துடன் பொதுக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்.
சரிந்து கிடக்கும் கம்பம்
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் சாலை ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசலின் எதிர்புறம் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கம்பம் சரிந்த நிலையில் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிந்த நிலையில் கிடக்கும் கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தஸ்நேவிஸ், கோட்டார்.
நடவடிக்கை தேவை
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்கரையில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரமாக ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்கம்பத்தை சுற்றி ஒருவர் வீடு அமைத்துள்ளார். இதனால் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கின் வெளிச்சமானது சாலையில் தெரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைக்கு மின்விளக்கு வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுச்சாமி, மேல்கரை.