புகார்பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-16 19:00 GMT

குண்டும் குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் தொடா்ச்சியாக கனரக வாகனங்கள் செல்வதால் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, வாகனங்களும் பழுதடைகின்றன. மேலும் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் உடைந்து குடிநீரும் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை உள்ளது. ஆனால், வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. மேலும். மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகிறார்கள். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வேகத்தடைக்கு வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-திருக்குமரன், கடையம்.

ஒளிராத மின்விளக்குகள்

பொட்டல்புதூர்-கடையம் சாலையில் திருமலைப்புரம் வரை அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த பல நாட்களாக எரிவதில்லை. இதனால் அருகில் உள்ள பள்ளிவாசல், மற்றும் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு செல்லும் மக்கள் இரவு நேரங்களில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலையில் வேகத்தடையும் அமைக்கப்படாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதோடு விபத்துகளும் நேரிடுகிறது. சம்பந்தப்பட்ட துறைகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-அகமது, பொட்டல்புதூர்.

நிறைவுபெறாத சாலைப்பணியால் சிரமம் 

சிவகிரி தாலுகா, தென்மலை ஊராட்சி அருகன் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும், பணிகள் நிறைவுபெறவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

-ரங்கராஜ், அருகன்குளம்.

ரெயில் நின்று செல்லுமா?

செங்கோட்டை- தாம்பரம் வாராந்திர ரெயில் தென்காசி, அம்பாசமுத்திரம், நெல்லை வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில் கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் இந்த ரெயில் சேவைக்காக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ரெயில் கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அம்ஜத், முதலியார்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்