புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-12-11 18:45 GMT

புகாருக்கு உடனடி தீர்வு

சுரண்டையில் இருந்து ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு காலை, மாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்ட பணி 

ஆலங்குளம் காமராஜர் சிலையின் கீழ்புறத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முழுமை பெறாததால், பள்ளத்தை சரிவர மூடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றி, பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ஞானசேவியர், ஆலங்குளம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் அருகே திருமலையப்பபுரம் ரேஷன் கடை எதிர்புறத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-இப்ராஹிம், முதலியார்பட்டி.

பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அவசியம்

கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் இருந்த வேகத்தடைகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடைகளை அமைக்கவில்லை. இதனால் அந்த வந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மீண்டும் வேகத்தடைகளை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சேதமடைந்த சாலை

கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்து 11-வது வார்டு அம்மன் கோவில் கீழத்தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-செல்வராஜ், குலசேகரப்பட்டி.

பொது கழிப்பறை தேவை

சங்கரன்கோவில் யூனியன் சுப்புலாபுரம் பஞ்சாயத்தில் பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் உள்ளது. எனவே அங்கு பொது கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சுப்பிரமணியன், சுப்புலாபுரம். 

Tags:    

மேலும் செய்திகள்