'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-09 17:28 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவில் தேங்கும் கழிவுநீர்

நத்தம் ரோடு ஆ.எம்.டி.சி.நகர் திருவள்ளுவர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-அப்துல்கனி, திருவள்ளுவர் காலனி.

குவிந்து கிடக்கும் குப்பை

தேனியை அடுத்த அன்னஞ்சி 1-வது வார்டு தொட்டாராயர் பெருமாள் கோவில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல், அன்னஞ்சி.

புதர்மண்டி கிடக்கும் கால்வாய்

கடமலைக்குண்டு ஊராட்சி மேலப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே கால்வாயை தூர்வாருவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும்.

-ரவி, மேலப்பட்டி.

வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல்-மதுரை சாலையில் தோமையார்புரம் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதையொட்டி வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பத்மநாபன், ஆலமரத்துப்பட்டி.

பள்ளம், மேடாக காட்சியளிக்கும் சாலை

தேனி அருகே சத்திரப்பட்டியில் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-செல்வம், தேனி.

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

தேனியை அடுத்த அனுமந்தன்பட்டி குள்ளிகோனார் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக அங்குள்ள வீடுகள் அருகே பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அந்த பணிகள் முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

-ஜெயஸ்ரீ, அனுமந்தன்பட்டி.

இரவில் பஸ் இயக்கப்படுமா?

திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு இரவு 9 மணி வரையே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் திண்டுக்கல்லுக்கு வேலைக்கு வந்துவிட்டு ஏ.வெள்ளோட்டுக்கு திரும்பி செல்பவர்கள், வெளியூர்களுக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இரவு 10 மணி வரை ஏ.வெள்ளோடுக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசக்தி, திண்டுக்கல்.

குப்பையால் சுகாதாரக்கேடு

ஆண்டிப்பட்டி கன்னியப்பபிள்ளைபட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-செல்வக்குமார், ஆண்டிப்பட்டி.

துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதம்

பழனி அருகே சின்னக்கலையம்புத்தூரில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-அழகுஈஸ்வரன், சின்னக்கலையம்புத்தூர்.

தெருநாய்கள் தொல்லை

பழனி பெரியப்பாநகர், சுப்பிரமணியபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் அப்பகுதிகளில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-லாவண்யா, பழனி.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்