புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி ரஹ்மத் நகர் சாலையோர வளைவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகுவதாக முகம்மது காசிம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் அவசியம்
சங்கரன்கோவில் கோமதியாபுரம் தெருவில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. பழைய ஓட்டு கட்டிடமான இங்கு மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் உணவுப்பொருட்கள் வீணாகிறது. எனவே அங்கு நூலகம் எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஸ்டீவ் ரோஜன், சங்கரன்கோவில்.
அடிப்படை வசதிகள் தேவை
தென்காசி மங்கம்மா சாலையில் அமைந்துள்ள களக்குடி தெருவில் குடிநீர், சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-வெங்கடேஷ், தென்காசி.
தெருநாய்கள் தொல்லை
சுரண்டை பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-செய்யது அலி, சுரண்டை.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
பழைய குற்றாலம் விலக்கில் இருந்து திருமலைபுரம் விலக்கு வரையிலும் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்குவதால், சாலை சேதமடைவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-கண்ணன், கேளையாபிள்ளையூர்.