புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-10-12 18:45 GMT

ஆபத்தான வளைவில் எச்சரிக்கை பலகை அவசியம்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி ரஹ்மத் நகரில் ஆபத்தான சாலை வளைவில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு எச்சரிக்கை பலகையும், சிவப்பு நிற ஒளிரும் விலக்கும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முகம்மது காசிம், முதலியார்பட்டி.

சேதமடைந்த பாலம்

ஊத்துமலை- வீரகேரளம்புதூர் மெயின் ரோட்டில் ஆர்.சி.சர்ச் நடு தெரு பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் அந்த வழியாக தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது எனவே, அங்கு புதிய தரைமட்ட தாம்போதி பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-பாபா, ஊத்துமலை.

வீணாகும் குடிநீர்

சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டி நடு தெருவில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் உள்ள குடிநீர் குழாயில் நல்லி இல்லாததால் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சேதமடைந்த வாறுகாலை சீரமைத்து, குடிநீர் குழாய்க்கு நல்லி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-செல்வகுமார், பெருமாள்பட்டி.

துவாரம் விழுந்த வாறுகால் பாலம்

சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோடு தனியார் ஆஸ்பத்திரி அருகில் உள்ள வாறுகால் பாலம் சேதமடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-மீனாட்சி, சங்கரன்கோவில்.

மின்விபத்து அபாயம்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1-வது தெருவில் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, மின்கம்பியில் உரசி மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்