பஸ்வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான், தென்கரை, குருவித்துறை, அனைப்பட்டி வழியாக நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வரை இயக்கப்படும் பஸ்கள் வாரத்தில் பாதி நாட்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவிகள் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் தினமும் தடையில்லாமல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், தென்கரை.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஆலங்குளம் அன்புநகர் மெயின் ரோட்டில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
சிக்கந்தர், அன்புநகர்.
குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா செம்மனிப் பட்டியில் புதிய பாலம் கட்டுமானப் பணியின்போது உடைந்த குடிநீர் குழாய் பல மாதங்களாக சரிசெய்யப் படாமல் உள்ளது. மேலும் குடிநீர் சாலையில் கழிவுநீர் போல தேங்கி உள்ளது. எனவே இந்த பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
முத்து, வாடிப்பட்டி.
ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலை அம்பேத்கர் சிலை பின்புறம் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அவனியாபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகர் 90-வது வார்டு வைத்தீஸ்வரன் தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரநாத், மதுரை.