'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-17 18:52 GMT

சேதமடைந்த சாலை 

திண்டுக்கல் ஏ.கே.எம்.ஜி.நகர் 5-வது தெருவில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோன்றி விட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஏ.கே.எம்.ஜி.நகர்.

குப்பைகள் தினமும் அள்ளப்படுமா?

திண்டுக்கல் சந்தைரோட்டில் முதியோர் இல்லத்தின் அருகில் சாலை ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் சேரும் குப்பைகளை தினமும் அள்ளுவது இல்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் வெளியே விழுவதோடு, மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை தினமும் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா.

-ஜெயச்சந்திரன், பாரதிபுரம்.

பயன்பாட்டுக்கு வராத உடற்பயிற்சி கூடம்

கம்பம் காந்திஜி பூங்காவில் உடற்பயிற்சி கூடம், யோகா மையம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. எனினும் இதுவரை அவற்றை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதனால் பூங்காவுக்கு வருபவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உடற்பயிற்சி கூடம், யோகா மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

-செல்வா, கம்பம்.

பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

திண்டுக்கல்லில் இருந்து பழைய கரூர் சாலையில் உள்ள கல்லூரிகளுக்கு காலை, மாலை நேரத்தில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

-ஜெயப்பிரகாஷ், திண்டுக்கல்.

சாலை சீரமைக்கப்படுமா? 

பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுபட்டியில் மங்கம்மாள் சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.

சென்னைக்கு பஸ் வசதி

தேனி மாவட்டம் வருசநாட்டில் இருந்து சென்னைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் அந்த பஸ் தற்போது இயக்கப்படாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வருசநாட்டில் இருந்து சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும்.

-மணிகண்டன், வருசநாடு.

பாலம் கட்டும் பணி மந்தம்

பெரியகுளம் தாலுகா எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டை கிராமத்தில் தரைப்பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. தெருவின் நடுவே பாலம் கட்டப்பட்டு அரைகுறையாக இருப்பதால், பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.

-சூரியபிரகாஷ், புதுக்கோட்டை.

எரியாத தெருவிளக்குகள்

சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர்நகர், பெரியார்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த பகுதிகள் இரவில் இருள் சூழந்து விடுவதால் மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரியவைக்க வேண்டும்.

-சரவணபுதியவன், சின்னமனூர்.

சாலை சீரமைப்பு அவசியம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்னால் உள்ள ஆர்.எஸ்.சாலையில் ஆங்காங்கே பள்ளம் காணப்படுகிறது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர்.எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-ராஜாத்தி, திண்டுக்கல்.

போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் சாலையை ஆக்கிரமித்து பலர் வியாபாரம் செய்கின்றனர். இதனால் வாகனங்கள் இயல்பாக செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசுதா, திண்டுக்கல்.


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்