'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-15 17:45 GMT

சிமெண்டு கால்வாய் சீரமைப்பு

ஆத்தூர் தாலுகா சித்தரேவு மந்தைக்குளத்துக்கு மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த சிமெண்டு கால்வாய் சேதம் அடைந்து பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டன. அதில் செடி, கொடிகள் முளைத்து இருப்பதால் தண்ணீர் வீணாவதோடு, குளத்துக்கு முழுமையாக வந்து சேருவதில்லை. எனவே சிமெண்டு கால்வாயை சீரமைக்க வேண்டும். -விவசாயிகள், சித்தரேவு.

தார்சாலை அமைக்க வேண்டும்

தேனி மாவட்டம் குமணன்தொழு சாலையில் இருந்து பொன்னன்படுகை வரை உள்ள சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. பாதசாரிகள் நடந்து சென்றால் கூட கற்கள் குத்தும் அளவுக்கு சாலை மோசமாகி விட்டது. அங்கு புதிதாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், பொன்னன்படுகை.

குடிநீர் குழாய் உடைப்பு

போடி கோட்டை கருப்பசாமிகோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது. இதனால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த குழாயை சரிசெய்து பதிக்காமல் புதிதாக குழாய் பதிக்க வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும். -ஜேக்கப், போடி.

கண்காணிப்பு கேமரா அவசியம்

திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போதிய அளவில் இல்லை. மேலும் தற்போது இருப்பதில் ஒருசில கேமராக்களும் செயல்பாட்டில் இல்லை. செயல்படாத கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, கூடுதலாக கேமராக்களை பொருத்த வேண்டும். -கண்ணன், திண்டுக்கல்.

சீரான குடிநீர் வினியோகம்

ஆண்டிப்பட்டி நகரில் ஒருசில பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ஆண்டிப்பட்டி.

வேகத்தடைகளால் தொல்லை

தேனி லட்சுமிபுரத்தில் இருந்து பெரியகுளம் வரை அதிக அளவில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் அடையாள குறியீடு எதுவும் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே தேவையற்ற இடங்களில் இருக்கும் வேகத்தடைகளை அகற்றுவதோடு, மீதமுள்ள வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரைய வேண்டும். -குமரன், தேனி.

பள்ளி அருகே குப்பைகள்

திண்டுக்கல் தொந்தியாபிள்ளைதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அங்குள்ள பிரதான சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, கால்வாயை தூர்வார வேண்டும். -பொதுமக்கள், தொந்தியாபிள்ளைதெரு.

சாய்ந்து நிற்கும் மரம்

கொடைக்கானல் தாலுகா தடியன்குடிசை-பெரும்பாறை இடையேயான சாலையின் ஓரத்தில் ஒரு மரம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று, மழையின் போது மரம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு விடும். அதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், தடியன்குடிசை.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் ஆரோக்கியமாதா தெரு பகுதியில் பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் மண் சேர்ந்து நிரம்பி விட்டது. மழை பெய்தால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் செல்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை அகற்ற வேண்டும். -ராஜா, திண்டுக்கல்.

சேதம் அடைந்த சாலை

திண்டுக்கல் நாகல்நகர் சிறுமலைசெட்டில் இருந்து தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தம் வரை உள்ள சாலை சேதம் அடைந்து விட்டது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி விட்டன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -பிரியா, திண்டுக்கல்.


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Tags:    

மேலும் செய்திகள்