தேங்கி நிற்கும் மழைநீர்
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் போடப்பட்டு சில வருடங்கள் ஆவதால் முற்றிலுமாக சேதமடைந்து பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வானங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊருணி தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இந்த ஊருணியில் ஆகாயத்தாமரைகள், கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊருணியில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் நகர் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பஸ்கள் வேண்டும்
சிவகங்கை நகரில் 2 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் காலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே, காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.