'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 7-வது வார்டு சுதந்திரபுரம் 1-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், சுதந்திரபுரம்.
தபால்கள் முறையாக கிடைப்பதில்லை
கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வரும் தபால் கடிதங்கள், அஞ்சல் அட்டைகள் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே தபால்களை முறையாக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தருமத்துப்பட்டி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
பழனியை அடுத்த காவலப்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், காவலப்பட்டி.
அடிப்படை வசதிகள் தேவை
பழனியை அடுத்த பாலசமுத்திரம் செம்மேட்டுப்பாறை பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. வடிகால் வசதி இல்லாததால் எப்போது மழை பெய்தாலும் வீடுகளின் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
-காளிதாஸ், செம்மேட்டுப்பாறை.
தெருவின் நடுவே மின்கம்பம்
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்துக்கோட்டை கரட்டூரில் உள்ள தெருவின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை தெருவோராமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, கரட்டூர்.
காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சுகாதார வளாகம் இதுவரை திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறந்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ராஜ்குமார், ஊத்துக்காடு.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன் தங்கராஜ், அம்மச்சியாபுரம்.
வனப்பகுதியில் குவியும் குப்பைகள்
கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் உள்ள குப்பை கிடங்குக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வனப்பகுதியில் விழுந்து குவிகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், கடமலைக்குண்டு.
சேதமடைந்து வரும் சாலை
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலை சேதமடைந்து வருகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் கலெக்டர் அலுவலகத்துக்கு வாகனங்களில் வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், தேனி.
ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடை
தேனியை அடுத்த புலிக்குத்தி அருகே சாலமலைக்கரடு பகுதியில் உள்ள வெட்டுக்காடு ஓடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் ஓடை தூர்வாரப்படாமல் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், புதர்களை அகற்றி தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், புலிக்குத்தி
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
----------------------