புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-08-24 16:10 GMT

எரியாத மின்விளக்குகள்

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் மணல் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அப்பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், இரவு நேரம் விஷப்பாம்புகள் நடமாடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

தபால் பெட்டி தேவை

திக்கணங்கோடு தபால் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் சுவற்றில் தபால் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதை மத்திகோடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது தபால் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால், மத்திகோடு கிராம மக்கள் தபால்களை அனுப்புவதற்கு திக்கணங்ேகாடு அல்லது கருங்கல் தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மத்திகோடு பகுதியில் மீண்டும் தபால் பெட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எட்வின் ஜோஸ், மத்திகோடு.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. திருவட்டார் பஸ் நிலையம் அருகில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, பக்தர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், திருவட்டார்.

சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை மற்றும் சில ஊர்களில் இருந்து வரும் சாலைகளும் மகாதானபுரத்தில் உள்ள ரவுண்டானாவில் சந்திக்கின்றன. ஆனால், இந்த ரவுண்டானாவில் எந்த வித போக்குவரத்து சிக்னல் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரம் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைத்து விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி.

சுகாதார சீர்கேடு

குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அன்னிக்குளத்தில் இருந்து படப்பகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு நீரோடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரோடையில் சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகள், இறந்து போன நாய், மாடு உள்ளிட்ட விலங்குகளின் உடல்களை வீசிச் செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையில் உள்ள கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மேசியா, குமாரபுரம்.

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழவண்ணான்விளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.சுபாஷ், கீழவண்ணான்விளை.

Tags:    

மேலும் செய்திகள்