'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்சாலை வசதி தேவை
பெரியகுளம் அருகே தீர்த்ததொட்டியை அடுத்துள்ள கல்லாற்று மெயின்ரோட்டில் இருந்து கோரைக்குளம் கண்மாய்க்கு செல்ல சாலை வசதி இல்லை. அது மண் பாதையாக இருப்பதால் சாரல் மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தார்சாலை வசதி செய்த தரவேண்டும்.
-பாண்டியன், பெரியகுளம்.
சேதமடைந்த கண்ணாடி
கண்டமனூரில் இருந்து வருசநாடு வரை தேனி பிரதான சாலையில் வளைவான பகுதிகளில் எதிரே வாகனங்கள் வருவதை பார்க்க குவியாடி கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் பல கண்ணாடிகள் சேதம் அடைந்து விட்டன. இதனால் வளைவில் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்க மீண்டும் குவியாடி கண்ணாடிகளை பொருத்த வேண்டும்.
-செல்வம், மயிலாடும்பாறை.
கண்மாய் தூர்வாரப்படுமா?
போடி ஊராட்சி ஒன்றியம் கூழையனூரில் உள்ள கண்மாய் தூர்வாரப்படவில்லை. இதனால் புதர்கள் மண்டி காணப்படுவதோடு, சில இடங்கள் மேடாகி விட்டன. இதனால் மழைக்காலத்தில் தேவையான அளவு தண்ணீரை சேமிக்க முடியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலத்துக்கு முன்பு கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.
-பொதுமக்கள், கூழையனூர்.
வீட்டின் மேல் செல்லும் மின்கம்பிகள்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 2, 3-வது வார்டுகளில் வீடுகளுக்கு மேல் மின்சார கம்பிகள் செல்கின்றன. இதனால் பலத்த காற்று, மழையின் போது விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. இந்த மின்சார கம்பிகளை மாற்றி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், அம்மையநாயக்கனூர்.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்
திண்டுக்கல் ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி கோம்பையன்பட்டிக்கு காலையில் வந்து செல்லும் 2 அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் வேலைக்கு செல்வோர் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
-ஆரோக்கியசாமி, கோம்பையன்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனி, திருநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் குழந்தைகள் விளையாட முடியாத அளவுக்கு தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் வேலை முடிந்து தனியாக யாரும் செல்ல முடியவில்லை. தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
-அபுபக்கர் சித்திக், திருநகர்.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
தேனி மாவட்டம் ஆங்கூர் பாளையம் ஊராட்சி சாமாண்டிபுரத்தில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக இருப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-முருகேசன், சாமாண்டிபுரம்.
சேதமடைந்த சாலை
திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையில் இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.
-ராம், திண்டுக்கல்.
பாதாள சாக்கடை மூடிகளால் விபத்து
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே குழாய் இணைப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு மூடிகள் சாலையை விட உயரமாக உள்ளது. மேலும் மூடிகள் உள்ள இடங்களில் சாலையும் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பழனிசெட்டிபட்டி.
கற்களால் விபத்து அபாயம்
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் சாலையோரம் பெரிய பள்ளங்கள் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க நான்கு வழிச்சாலையில், எச்சரிக்கை சைகையுடன் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஆனால் சாலையோரம் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இரவு நேரங்களில் சாலையோரம் உள்ள கற்கள் தெரியாததால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த கற்களை அகற்றுவதுடன், தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாகன ஓட்டிகள், வேடசந்தூர்.
--------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
-------