புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-08-19 15:52 GMT

நடவடிக்கை எடுக்கப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அறுகுவிளை மேற்கு தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் தேங்கி கிடக்கும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருந்தது. இதனால், கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி குப்பைகள் அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சாலையில் பாயும் குடிநீர்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை எப்போதும் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாகி சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது, சாலை சேதமடைந்து பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து சேதமடைந்த சாலையையும் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து, கோட்டார்.

எரியாத மின்விளக்கு

கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 2-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசுப்ரமணியன், கிருஷ்ணன்கோவில்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இருந்து திருவேணி சங்கமம் கடற்கரைக்கு செல்லும் சாலையோரம் மின் இணைப்பு பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மின் இணைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த பெட்டி சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத்குமார், கன்னியாகுமரி.

வீணாகும் குடிநீர்

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலை சந்திப்பு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் தற்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீர் ஓடையில் பாய்ந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை அந்த இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை முறையாக சீரமைத்து குடிநீர் வீணாகுவதைவும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

செல்லங்கோணம் அரசு நடுநிலைப்பள்ளியின் அருகில் இருந்து கருக்குப்பனை சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து தார்சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாத அளவில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயானந்தன், செல்லங்கோணம்.

Tags:    

மேலும் செய்திகள்