'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-07-30 14:50 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

குஜிலியம்பாறையை அடுத்த செங்குளத்துப்பட்டியில் இருந்து முத்துவீரன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-குமரேசன், செங்குளத்துப்பட்டி.

சேதமடைந்து வரும் மின்கம்பம்

அம்மையநாயக்கனூரை அடுத்த மாவுத்தன்பட்டியில் இருந்து பொம்மணம்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் அது முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

தொல்லை கொடுக்கும் பன்றிகள்

திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் அவை கழிவுநீரில் புரண்டு தெருக்களில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.

-அப்பாஸ், திண்டுக்கல்.

சாலை வசதி செய்யப்படுமா?

நிலக்கோட்டை தாலுகா சில்வார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக், வெள்ளையம்.பட்டி.

சமுதாய கூடம் அமைக்க வேண்டும்

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் ஏழை மக்கள் தங்கள் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளை கூடுதல் கட்டணம் செலுத்தி மண்டபங்களில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சமுதாய கூடம் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அதேபோல் பூங்காவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரா, சீலப்பாடி.

ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி

போடி குச்சனூர் சாலையின் குறுக்காக தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது சாலை துண்டிக்கப்பட்டு அதன் அருகிலேயே மாற்றுப்பாதையும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது மண் பாதையாக இருப்பதால் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தரைப்பாலம் கட்டும் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்யா, போடி.

ஆக்கிரமிப்பின் பிடியில் பூங்கா

கம்பத்தை அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள பூங்கா ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் நடைபயிற்சி செய்பவர்கள், பூங்காவில் ஓய்வு எடுப்பதற்காக வரும் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-ராஜா, கம்பம்.

மண் பாதையாக மாறிய சாலை

தேவதானப்பட்டி பேரூராட்சி 17-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-செல்லப்பாண்டி, தேவதானப்பட்டி.

திறந்த நிலையில் கிணறு

உத்தமபாளையம் தாலுகா நாகையகவுண்டன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு விளையாட வரும் சிறுவர்கள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்குள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனையும் சீரமைக்க வேண்டும்.

-மணிகண்டன், நாகையகவுண்டன்பட்டி.

சிமெண்டு சாலை சேதம்

தேனியை அடுத்த ஊஞ்சாம்பட்டி ஊராட்சி 2-வது வார்டு அன்னஞ்சி வடக்கு தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல், அன்னஞ்சி.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------

Tags:    

மேலும் செய்திகள்