ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்
மதுரை வைகை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் ஆற்றின் கரையை ஒட்டி கட்டப்பட்டுள்ள சுவற்றை தாண்டி ஆற்றுக்குள் குப்பைகளை போடுகிறார்கள். இதனால் வைகை ஆறு மாசுபடும் நிலை உள்ளது. எனவே ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.
பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நடை மேடையின் தளம் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் நடை மேடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நடை மேடையில் பெரிதும் சிரமத்துடன் நடக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரணவம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
மண் திருட்டு
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில் மண் திருடப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. மேலும் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் நீரின்றி கிராமம் முழுவதும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே விவசாய நிலங்களில் மண் திருடப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப்பகுதிகளில் எண்ணற்ற நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை பின் தொடர்ந்து தொல்லை அளிக்கிறது. மேலும் வாகனங்களின் குறுக்கே வந்தும் விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, தேவகோட்டை.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் ஆண்டாள்புரம் பஸ் நிறுத்தம் மற்றும் தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
கணேசன், ஆண்டாள்புரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் இரவு நேரங்களில் தூங்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் கொசுத்தொல்லையை போக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சுரேஷ், பரமக்குடி.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் வள்ளுவர் காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், வள்ளுவர் காலனி.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் மெயின் ரோட்டில் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.