`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அருகில் குடிநீர் குழாயில் 2 வாரங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இதுபற்றி வாசகர் அம்ஜத் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சேதம் அடைந்த மின்கம்பம்
நெல்லை மாவட்டம் நவ்வலடியில் இருந்து உவரி செல்லும் வழியில் காரிக்கோவில் சாலையில் அமைந்துள்ள உயர்அழுத்த மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
-விஜயலிங்கம், குஞ்சன்விளை.
பஸ் முறையாக இயக்க வேண்டும்
நெல்லை சந்திப்பில் இருந்து மானூர் ஒன்றியம் புதூர் கிராமத்திற்கு 3 'எப்' என்ற பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வாரத்தில் சில நாட்கள் இயக்கப்படுவது இல்லை. மாணவிகள், பொதுமக்கள் இந்த பஸ்சை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாரத்தில் சில நாட்கள் திடீரென நிறுத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மாரியப்பன், புதூர்.
குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் காரிச்சாத்தான் ஊராட்சி அடைக்கலாபுரம் கிராமம் கிழக்கு தெருவில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தருவதாக கூறினர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டுகிறேன்.
-விஜய், அடைக்கலாபுரம்.
பஸ் வசதி தேவை
சுரண்டையில் இருந்து நெல்லைக்கு செல்ல இரவு 7.30 மணிக்கு பின்னர் போதிய பஸ் வசதி இல்லை. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை செல்ல குறித்த நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு 8.15, 8.30, 9 மணிக்கு இயங்கிய பஸ்கள் முறையாக இயங்கவில்லை. எனவே இரவு 7.30 மணிக்கு மேல் முறையாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணியன், ஆலங்குளம்.
சாலையின் நடுவே மின்கம்பம்
செங்கோட்டை காமராஜர் சாலை பக்கத்தில் பூத்திரம் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவுக்கு செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 மின்கம்பங்கள் உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையின் மத்தியின் அமைந்துள்ள 2 மின்கம்பங்களையும் ஓரமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
கால்வாயை தூய்மைப்படுத்த வேண்டும்
ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடையாம்புளி கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை தூய்மைப்படுத்தவில்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை தூய்மைப்படுத்த வேண்டும்.
-மனோஜ்குமார், உடையாம்புளி.
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகே சென்னல்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் கருங்கல் பாலம் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதிக்கு வாசகர் கணேசன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. புகாருக்கு உடனடி தீர்வு காண உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.