புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

Update: 2022-06-15 16:53 GMT

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதம் அடைந்த சாலை 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு உருமன்குளம், ரம்மதபுரம், தோப்புவிளை வழியாக செல்லும் தார்சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சுடலைமணி, ரம்மதபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை பிரதான சாலை ஆகும். இதில் வாகன போக்குவரத்து மிகவும் அதிகம். மானூர் தாலுகா தேவர்குளத்துக்கு தெற்கு பகுதியில் சாலைக்கு மிகவும் அருகில் குப்பை, கழிவுகளை போட்டு பகல் நேரங்களில் தீ வைத்து எரிக்கிறார்கள். அதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு எதிரில் வரும் வாகனம் தெரியாமல் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகசுந்தரம், தேவர்குளம்.

நிறுத்தப்பட்ட பஸ்

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூருக்கு பாபநாசம் பணிமனையில் இருந்து தடம் எண் `3-ஏ' பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பஸ் மூலம் கருத்தப்பிள்ளையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர். பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

குரங்குகள் அட்டகாசம்

கடையம் யோகீஸ்வரர் தெருவிலும், வடக்கு தெருவிலும் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் தெருவில் வருவோர், போவோரை கடிக்க வருகிறது. வீட்டுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்.

பஸ் வசதி தேவை

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு சங்கரன்கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை தவறவிட்டால் அடுத்த பஸ் 3.30 மணிக்கு தான் சங்கரன்கோவிலுக்கு புறப்படுகிறது. ஆலங்குளம், தென்காசியில் இருந்து வரும் பஸ்கள் வீராணம், ஊத்துமலை வழியாக சங்கரன்கோவிலுக்கு செல்கிறது. இந்த பஸ்கள் கீழக்கலங்கல் ஊருக்குள் வந்து சங்கரன்கோவில் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-தட்சணாமூர்த்தி, கீழக்கலங்கல்.

குடிநீர் வசதி வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரசேரி ஊராட்சி கிளாக்குளம் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை. மக்களுக்கு குடிநீர் போதிய அளவு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சுயம்புகனி, கிளாக்குளம்.

மூடப்படாத பள்ளம்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் வெள்ளமடம் ஊராட்சி நொச்சிகுளம் கிராமத்தில் பொது கழிவறை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. கழிவறை கட்டாததால் பள்ளத்தை அப்படியே போட்டு விட்டனர். இதனால் அந்த பள்ளத்தில் சிறுவர்கள் தவறி விழுந்து விடுகிறார்கள். ஆடு, மாடுகளும் அதில் விழுந்து விடுகிறது. எனவே அந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிராஜ், நொச்சிகுளம்.

எரியாத தெருவிளக்குகள்

புதுக்கோட்டை கிராமம் தெற்கு தெரு ரேஷன் கடைக்கு அருகே செல்லக்கூடிய ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் இருக்கும் தெருவிளக்குகள் எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் எரியச்செய்ய வேண்டும்.

-கணேசன், புதுக்கோட்டை.

* முடிவைத்தானேந்தல் கிராமம் குற்றாலம் பிள்ளை ஓடைத்தெருவில் வடக்கில் இருந்து தெற்காக உள்ள இரண்டாவது மின்கம்பத்தில் பல நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இந்த மின்கம்பம் அமைந்துள்ள இடத்தில் அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ளதால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-கண்ணன், முடிவைத்தானேந்தல்.

Tags:    

மேலும் செய்திகள்