'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-14 21:45 GMT

குடிநீர் குழாய் சீரமைப்பு

சேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு 1-வது தெருவில் கல்யாண கணபதி கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ஆர்.கோகுல், அம்மாபேட்டை, சேலம்.

===

காற்று மாசுபாடு

தர்மபுரி நகரை அடுத்த பிடமனேரி ஏரிக்கரையையொட்டி செல்லும் சாலை தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையுடன் இணைகிறது. அந்த பகுதியையொட்டி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் கழிவுப்பொருட்கள் அதிக அளவில் கொட்டப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு கழிவுப்பொருட்களை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-மகேஸ்வரன், தர்மபுரி.

===

தெருநாய்கள் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளின் குறுக்கே தெருநாய்கள் ஓடுவதால் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பலரும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து வருகி்ன்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

===

சேதமடைந்த தூண்கள்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தின் எதிரில் பெரியார் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள தூண்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகின்றன. இதனால் தூண்கள் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.

-ராஜன், 4 ரோடு, சேலம்.

====

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

சேலம் மாவட்டம் ஓமலூர் எம்.செட்டிப்பட்டியில் தொடக்கப்பள்ளி சாலையையொட்டி அமைந்துள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. மேலும் ஓமலூர் மற்றும் பிற நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் அந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளிக்கு உள்ளே சென்று மது குடிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளி எதிரே வேகத்தடைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முல்லைவேந்தன், ஓமலூர், சேலம்.

====

குடிநீர்தொட்டி அமைக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் மலைப்பாதை வழியாக பக்தர்கள் படி ஏறி செல்கின்றனர். இந்தநிலையில் படி ஏறி செல்லும் பக்தர்கள் தண்ணீர் இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மலைப்பாதையில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

-சிவா, திருச்செங்கோடு.

===

சாலை புதுப்பிக்கப்படுமா?

சேலம் 3 ரோடு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு 5 தியேட்டர் வழியாக செல்ல வேண்டும். அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிலர் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன்வருவார்களா?

-ராஜா, 3 ரோடு, சேலம்.

===

மேம்பாலத்தில் தெரியும் இரும்பு கம்பிகள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். அந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்கி்ன்றன. மேம்பாலத்தின் நடுவில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. அந்த குழியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளன. இந்த இரும்பு கம்பிகளால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.

-மணி, ஓமலூர், சேலம்.

===

Tags:    

மேலும் செய்திகள்