புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-10-15 18:45 GMT

சீரமைக்கப்பட்டது

நாகர்கோவில் சற்குணவீதி வறீது தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால், அந்த பகுதியில் இருள்சூழ்ந்து காணப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை சீரமைத்து எரியவைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

தோவாளை பிரதான சாலை வங்கிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்த பகுதியாகும். இங்கு பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வேகக்கட்டுபாடு வெள்ளை நிறக்கோடுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தகுந்த சிக்னல் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. எனவே, அந்த பகுதியில் பாதசாரிகள் அச்சமின்றி சாலையை கடந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சிதம்பரம், தோவாளை.

சீரான பஸ்வசதி ேதவை

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து 12 'டி' அரசு பஸ் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பேயோடு, சரல், ராமநாதபுரம், குருந்தன்கோடுக்கு 5.30 மணிக்கு வருகிறது. பின்னர், இதே பஸ் திங்கள்சந்தையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மேற்கூறிய வழித்தடத்தில் இயக்கப்படும். ஆனால், இந்த அரசு பஸ் சமீபகாலகமாக முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி 12 'டி' அரசு பஸ்சை சீரான முறையில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், ராமநாதபுரம்.

விரைந்து சீரமைக்க வேண்டும்

தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.காலனி பகுதியில் உள்ள தெருக்களில் சாலையை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்படுள்ளன. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பாபு, தேரூர்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சோலார் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. மேலும், மின்கம்பமும் துருப்பிடித்தும், செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, துருப்பிடித்த கம்பத்தையும், பழுதடைந்த மின்விளக்குகளையும் அகற்றி விட்டு புதிய மின்கம்பம், விளக்குகளையும் பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேணு, ஆளூர்.

விபத்து அபாயம்

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் செயல்படாத மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அடிப்பகுதியில் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், விளையாடும் சிறு குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்