புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-07-16 18:45 GMT

சாலையை சீரமைக்க வேண்டும்

ஆண்டிவிளையில் இருந்து கோவில்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

எரியாத விளக்குகள்

விழுந்தயம்பலத்தில் இருந்து அம்சி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்து தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும், இந்த சாலையோரத்தில் உள்ள பல மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைப்பதுடன், பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், விழுந்தயம்பலம்.

சுற்றுலா பயணிகள் சிரமம்

கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் அழகை ரசிக்கும் விதமாக சாய்வுதள பாதை போடப்பட்டது. கடந்த ஒரு சில நாட்களாக சாய்வுதள பாதையில் இரண்டு நுழைவாயிலிலும் சங்கிலி போடப்பட்டு நுழைவு பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், கடற்கரை அழகை ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நுழைவு பாதையில் போடப்பட்டுள்ள சங்கிலிகளை அகற்றி மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் சிரமத்தை போக்கிட வேண்டும்.

-சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்.

சுகாதார சீர்கேடு

பாலப்பள்ளம் பேரூராட்சி ஆலஞ்சி பகுதியில் நியாய விலை கடை, தபால் நிலையம் மற்றும் குடிநீர்தொட்டி அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள கிணற்றில் இறைச்சி, மீன்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை தொடர்ச்சியாக கொட்டிவருகின்றனர். இதனால், கிணறு நிரம்பி குப்பை மேடாகிவிட்டது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கிணற்றில் உள்ள குப்பை, கழிவுகளை அகற்றுவதுடன், அதன் மீது கம்பிவலை அமைத்து மழைநீர் சேகரிப்பு கிணறாக பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

-சுனில்ராஜ், ஆலஞ்சி.

மாசுபடும் கடற்கரை

மணவாளக்குறிச்சி சின்னவிளை கடற்கரைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பொழுது போக்கவும், கடலின் அழகை ரசிக்கவும் வருகை தருகின்றனர். ஆனால், இந்தபகுதியில் இருந்து கடியப்பட்டணம் செல்லும் கடற்கரை சாலையின் இரு பக்கமும் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடற்கரை மாசடைந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருமை தங்கம், மணவாளக்குறிச்சி.

சீரமைக்கப்படுமா?

மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில் திருமலையை சுற்றி நான்குபுறமும் சாலை வசதி உள்ளது. இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனந்தநாராயணன், மருங்கூர்.

நடவடிக்கை தேவை

முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கூனிமாவிளைவியில் இருந்து ஆற்றுக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கூனிமாவிளையில் ஓரத்தில் காங்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள்க்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண் பிரின்ஸ், கூனிமாவிளை.

வீணாகும் மின்சாரம்

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சேனாப்பள்ளி பகுதியில் சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாலையில் எரிய வைக்கப்பட்டு காலையில் அணைக்க வேண்டும். ஆனால், இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை காலையில் முறையாக அணைப்பதில்லை. இதனால், மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே, மின்சாரம் வீணாவதை தடுக்க தானாக இயங்கும் வகையில் எந்திரத்தை பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராமநாதபுரம்.

Tags:    

மேலும் செய்திகள்