சமுதாய வளைகாப்புக்கு அங்கன்வாடி பணியாளர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்

சமுதாய வளைகாப்புக்கு அங்கன்வாடி பணியாளர்களிடம் பணம் வசூலிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.;

Update: 2023-10-01 18:30 GMT

அங்கன்வாடி மையங்கள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் 122 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று கூடி குழந்தைகள் நல பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவி ராஜா மணி தலைமையில் திருமானூர் வட்டாரத்தை சேர்ந்த பெண் அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து மாநில சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமையியல் துறை இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருமானூர் வட்டாரத்தை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் தமிழக அரசு நடத்தும் சமுதாய வளைக்காப்புக்கு அங்கன்வாடி பணியாளர்களிடம் ஒவ்வொரு மையத்திற்கும் தலா ரூ.1,000 வீதம் வசூல் செய்து வளைகாப்பு நடத்துகிறார்.

பணி நீக்கம் செய்ய வேண்டும்

மேலும், பணியாளர்களுக்கு சிக்கன நாணய கடன் சங்கத்திலிருந்து கடன் பெற்று தருவதாக கூறி 100 பேரிடம் ரூ.3½ லட்சம் பெற்றுக்கொண்டு இதுவரை கடன் பெற்று தரவில்லை. பணி ஓய்வு பெற்ற பணியாளரிடம் பணப்பலன் பெற ரூ.12 ஆயிரம் வாங்கி வருகிறார். குழந்தைகள் வளர்ச்சி மையத்திற்கு அனைத்து உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான நிதியை தங்களிடம் தராமல் எங்களது பணத்தை போட்டு செலவு செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறார். எனவே அவர் மீது உரிய விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்