தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில்அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்புபோதுமான நிதி ஒதுக்கவில்லை என புகார்

Update: 2023-05-11 19:00 GMT

தர்மபுரியில் நடந்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் வார்டு வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார் தெரிவித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கூட்டம் தொடங்கியவுடன் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் பேசினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் செல்வராஜ், குமார் ஆகியோர் கடந்த 8 மாதங்களாக 3 முறை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கூட போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி பேசினர்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

இதையடுத்து திடீரென தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து கட்சி மாவட்ட கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கும் நிதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது என்று கூறினர்.

பணி உத்தரவு

இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஊராட்சிக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியிலிருந்து கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக ஒரு சில மாவட்ட கவுன்சிலர்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணி உத்தரவு பெற்று திட்ட பணிகளை செய்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உள்ளார். விசாரணையின் அடிப்படையில்தான் தீர்மானத்துக்கு கொண்டு வராமல் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்