கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை காணவில்லை; வடிவேலு சினிமா பட பாணியில் மனு

திண்டுக்கல்லில் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை காணவில்லை என்று வடிவேலு சினிமா பட பாணியில் கலெக்டரிடம் ஒருவர் மனு கொடுத்தார்.

Update: 2023-03-27 20:45 GMT

திண்டுக்கல்லில் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை காணவில்லை என்று வடிவேலு சினிமா பட பாணியில் கலெக்டரிடம் ஒருவர் மனு கொடுத்தார்.

கிணறு காணவில்லை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர்.

அப்போது வடிவேலு சினிமா பட பாணியில் கிணற்றை காணவில்லை என்று கூறி, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த முகமதுஅலிஜின்னா என்பவர் மனு கொடுத்தார். அந்த மனுவில், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி நேருஜிநகரில் இருந்த கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை காணவில்லை. அதை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இலவச வீட்டுமனை

மேலும் கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பூம்பாறை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பத்தினர் வாழ்கிறோம். பூம்பாறை கிராமத்தின் பூர்வகுடிகளான நாங்கள் குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கிறோம். ஒரே வீட்டில் 2 முதல் 3 குடும்பங்கள் சிரமத்துடன் வாழும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, அதில் வீடு கட்டி தரவேண்டும், என்றனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா புளியமரத்துக்கோட்டையை அடுத்த கோடாங்கிபட்டியை சேர்ந்த மக்கள், தங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை மீட்டுதரும்படி மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு அரசு சார்பில் கோடாங்கிபட்டியில் 195 பேருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. அதில் பலருடைய நிலத்தில் ஊன்றப்பட்டு இருந்த எல்லை கற்கள் அகற்றப்பட்டு விட்டன. எனவே எங்களுடைய நிலத்தை மீட்டு தருவதோடு, அளவீடு செய்து கற்களை ஊன்றி தரவேண்டும், என்றனர்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன்களில் கொத்தடிமை போன்று நடத்துவதாக கூறி சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் தொழிலாளர்களை இடமாற்றம் செய்தல், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன. தற்காலிக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறி கொத்தடிமை போன்று நடத்துகின்றனர், எனவே தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டு தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தாலுகா நாவாலூத்துவை சேர்ந்த பழனிசாமி கொடுத்த மனுவில், நாவாலூத்து கிராமத்தில் ஓடையை தூய்மைப்படுத்தும் பணியின் போது பனைமரங்கள் அகற்றப்பட்டன. அவற்றை தீவைத்து எரிக்காமல் எனது நிலத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்