விவசாயிகள், குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கலெக்டரிடம் மனு

அவினாசி அருகே வக்பு வாரியத்தின் பத்திரப்பதிவு தடையால் விவசாயிகள், குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2022-10-10 18:54 GMT

அவினாசி அருகே வக்பு வாரியத்தின் பத்திரப்பதிவு தடையால் விவசாயிகள், குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

பத்திரப்பதிவு தடை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். அவினாசி அருகே கானூர் ஊராட்சியை சேர்ந்த பெரியகானூர், சின்னகானூர், செங்குட்டை, தொட்டியபாளையம், செம்பியநல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இனாம் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ரத்து வாரியமாக மாற்றி, உழுதவர்களுக்கே நில உரிமை வழங்கப்பட்டுள்ளது. பட்டா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி இனாம் நில உரிமை இருப்பதாக கூறி தமிழ்நாடு வக்பு வாரியம் விவசாயிகளின் நிலத்தையும், பொதுமக்கள் குடியிருக்கும் மனை நிலத்தையும் நில பரிவர்த்தனை செய்ய முடியாதபடி பத்திரப்பதிவு தடை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பகுதியில் 75 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் மனைப்பிரிவுகளாக உள்ளன. 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்தும், குடியிருந்தும் வருகிறோம். வக்பு வாரியத்தின் இந்த பத்திரப்பதிவு தடையால் எங்கள் நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் வங்கி அடமானம் உள்ளிட்டவை வைக்க முடியாத நிலை தொடர்கிறது.

நடவடிக்கை

எனவே எங்கள் பகுதியில் வக்பு வாரியம் விதித்துள்ள பத்திரப்பதிவு தடையை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உண்மை அறிக்கை அளித்து, விவசாயிகளின், பொதுமக்களின் நில உரிமை பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்