பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டால்வடமாநில தொழிலாளர்கள் காவலன் செயலில் புகாா் அளிக்கலாம்

பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டால் வடமாநில தொழிலாளர்கள் காவலன் செயலில் புகார் அளிக்கலாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-09 18:38 GMT

வடமாநில தொழிலாளர்கள்

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று பரவியது. இது ஒரு வதந்தி. அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமை. நாமக்கல் மாவட்டம் மிகவும் அமைதியான மாவட்டம். இங்கு உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

காவலன் செயலி

ஒருவேளை நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், உடனடியாக போலீசாருக்கு 100 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் காவலன் செயலி மூலம் ஆன்லைனிலும் புகார் தெரிவிக்கலாம். உங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். இதை நீங்கள் வடமாநிலங்களில் உள்ள உங்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தி, புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வீடியோ வெளியானபோது பயந்து விட்டதாகவும், தற்போது எவ்வித அச்ச உணர்வு இன்றி வேலை செய்வதாகவும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், ஆலையின் உரிமையாளர் நல்லதம்பி, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்