கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் 750 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிலம்பாட்ட போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் கிருஷ்ணகிரி டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், 14 வயது பிரிவில், 6 எடைப்பிரிவிலும், 17 வயது பிரிவில் 9 எடைப்பிரிவிலும், 19 வயது பிரிவில் 8 எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. தனியாகவும், குழுவாகவும் போட்டிகள் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாநில போட்டி
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் 23 பேரும், மாணவிகள் 23 பேர் என மொத்தம் 46 பேர் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டிகளுக்கு தலைமை நடுவராக உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் செயல்பட்டார். இதில் பள்ளியின் தாளாளர் பிராங்களின், மேகலா பிராங்களின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.