விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கணக்கெடுப்பு பணி முடிந்து கணினியில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும். வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கணக்கெடுப்பு பணி முடிந்து கணினியில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும். வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருமண விழா
திருவாரூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு- சித்ரா தம்பதியரின் மகள் டாக்டர் உதயா, கிருஷ்ணமூர்த்தி-வசந்தா தம்பதியரின் மகன் டாக்டர் துரையரசன் ஆகியோரது திருமணம் மன்னார்குடியில் நேற்று காலை நடந்தது.
இந்த திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தாலி எடுத்துக்கொடுக்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலியை கட்டினார். பின்னர் மணமக்கள் முதல்-அமைச்சர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
விழாவிற்கு தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ வரவேற்றார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
விழாவில் மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். நான் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னால் எத்தனையோ மாவட்டங்களுக்கு, எத்தனையோ பகுதிகளுக்கு ஏன், எத்தனையோ மாநிலங்களுக்கு, ஏன் சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன்.
அப்போது எல்லாம் எனக்கு ஏற்படாத மகிழ்ச்சி, பெருமை, பூரிப்பு, திருவாரூருக்கு வரும்போது ஏற்படுகிறது. தலையாமங்கலம் பாலுவின் இல்லத்தில் நடக்கிற திருமணத்திற்கு வருவது தான் என்னுடைய தலையாய கடன். நீங்கள் எல்லாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களோ, அதை விட பல மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.
சீர்திருத்த திருமணங்கள்
1967-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெறும் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பு ஏற்ற பின்னர் முதன்முதலாக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன்படி இன்றைக்கு நடந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும். மேலும் இந்த திருமணம் தமிழ்முறைப்படி நடந்துள்ளது.
எந்த தமிழுக்காக நம்முடைய இயக்கம் பாடுபட்டு இருக்கிறதோ? தியாகங்கள் புரிந்து இருக்கிறதோ? அந்த தமிழை செம்மொழி ஆக்கிட வேண்டும் என்று குரல் கொடுத்து நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழிக்கு, செம்மொழி அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்து இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி
இங்கு பேசியவர்கள் கூறுகையில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, மக்கள் போற்றக்கூடிய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் இந்தியாவே வியந்து பார்க்கும் ஆட்சி, மற்ற மாநிலத்தவர்கள் வியந்து பார்த்து பின்பற்றும் ஆட்சி நடக்கிறது என்று கூறினார்கள். இப்படிப்பட்ட ஒரு உன்னதமான ஆட்சி உருவாக பாடுபட்டு பணியாற்றி இருக்கக்கூடிய செயல்வீரர்கள் பட்டியலில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்க கூடியவர்தான் தலையாமங்கலம் பாலு.
தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. உங்களுடைய நம்பிக்கைக்குரிய ஆட்சியாக விளங்கி வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எந்த அளவுக்கு நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அறிவித்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம் என்று ஒரு தவறான கருத்தை பதிவு செய்ய நான் விரும்பவில்லை. மீதம் இருக்கக்கூடிய திட்டங்களையும் விரைவில் நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கும்.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
இந்த ஆட்சியில் விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டது. 20 ஆண்டுகாலம் இல்லாத ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுச் சொன்னோம் ஆட்சிக்கு வந்த உடனே பட்ஜெட் வெளியிட்டோமா இல்லையா?. இந்த ஆண்டும் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மறைந்த தலைவர் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். அவர் ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, வணிகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் கலந்து பேசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்றுதான் இப்போதும் அனைவரிடமும் கலந்து பேசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என செய்தி வெளிவந்தது. இந்தியாவில் சிறந்த முதல்-அமைச்சர் என்ற நிலை மட்டும் அல்ல, இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு தான் முதலிடம் என்ற அந்த நிலை வரணும் அதுதான் எனக்கு பெருமை என்று நான் சொன்னேன்.
முதல்-அமைச்சரின் களஆய்வு திட்டம்
அதேபோல விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை இன்று அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். அதன்படி கடந்த 11-ந் தேதி ரூ.106 கோடியில் நவீன சேமிப்பு கிடங்குகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தேன். திருவாரூரில் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்தேன். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் சில நிதி பிரச்சினை, அதிகார பிரச்சினை காரணமாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதை தெரிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் முதல்-அமைச்சரின் கள ஆய்வுத்திட்டம்.
இந்த திட்டத்தின்படி வேலூர், கோவை மண்டலங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன். அடுத்து மதுரை மண்டலத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். தஞ்சை, திருவாரூருக்கும் ஆய்வு செய்ய வர உள்ளேன்.
ஒரு வாரத்தில் நிவாரணம்
சமீபத்தில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு உடனடியாக ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி வைத்தேன். அதன்படி ஆய்வு செய்து அறிக்கை அளித்ததின் பேரில் மத்திய அரசுக்கும் பாதிப்புகள் குறித்து கடிதம் எழுதினேன்.
தற்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, டேட்டா என்ட்ரி(கணினியில் பதிவு செய்வது) பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆட்சிக்கு உறுதுணை
தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார். எதை நிறைவேற்றவில்லை. ஒன்றிரண்டு திட்டங்கள் நிதி பற்றாக்குறை காரணமாக தாமதம் ஆகி இருக்கலாம். நீங்கள் கஜானாவை காலி செய்யாமல் ஒழுங்காக நிதி வைத்து இருந்திருந்தால் அதையும் நிறைவேற்றி இருப்போம். எல்லாவற்றையும் காலியாக்கி விட்டு, கடனாளியாக வைத்து விட்டு சென்றதால் தான் அதை சமாளிக்க சிரமமாக இருந்தது. அதையும் சமாளித்து தற்போது ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம். மீதமுள்ள 15 சதவீதம் பணிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன். அந்த நம்பிக்கையோடு நீங்கள் எப்பொழுதும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் துரைவடிவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் தலையாமங்கலம் பாலு நன்றி கூறினார்.