கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

ஆண்டியப்பனூர் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-01-30 12:01 GMT

குறைதீர்வு நாள்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி துணை தலைவர் அளித்துள்ள மனுவில் ஆண்டியப்பனூர் அணை கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் நீர்த்தேக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை. அதனை விரைந்து வழங்கி நீர்த்தேக்கத்தினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல் நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ் அளித்துள்ள மனுவில், எனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது நடவக்கை எடுக்ககோரி நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தேன். அதன்மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என கூறப்பட்டு இருந்தது.

நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 10 பேருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 பேருக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலிகள் என 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்