சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கோவையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.

Update: 2023-09-27 20:30 GMT

கோவை

கோவையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.

வளைகாப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, ராமநாதபுரத்தில் நடந்தது. இதற்கு மேயர் கல்பனா, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னோடி மாநிலம்

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிகளின் நலனில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் பிரசவங்கள் நடைபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற கருவுற்ற 4 முதல் 14 வாரத்துக்குள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளும் நல்ல சத்தான உணவை சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ள காலை உணவு திட்டம் மிக சிறப்பாக இருக்கிறது.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்

மேலும் பள்ளிகளில் மருத்துவக்குழு மூலம் மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்து உள்ளது.

கர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். எனவே கர்ப்பிணிகள் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து என்னென்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை பெற்று அவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பயிற்சி கலெக்டர் ஆஷிக் அலி, மாவட்ட குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரி முருகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா, குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி ஆண்டாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்