இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 50 பேர் கைது
நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமணன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
50 பேர் கைது
இதைத்தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தியும், பா.ஜ.க அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியும் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
போராட்டத்தில் நிர்வாகிகள் ரங்கன், சடையப்பன், முருகன், சபியா, சுரேஷ், பரமசிவன், பாலு, அப்துல் காதர், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தொடர் மறியல் போராட்டமானது இன்று (புதன்கிழமை) வள்ளியூரிலும், நாளை (வியாழக்கிழமை) அம்பையிலும் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன் கூறுகையில், யாரிடமும் கேட்காமல் இந்தியாவின் பாரம்பரியமான பெயரை பாரத் என ஜி-20 உச்சி மாநாட்டில் மத்திய அரசு மாற்றி உள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மாநாடு நடைபெறும் டெல்லி பகுதியில் வறுமையின் கீழ் உள்ள மக்களை மூடி மறைக்கும் செயலாக தார்பாய்கள் கட்டி அவர்கள் வசிக்கும் வாழ்விடங்களை மத்திய அரசு மூடி உள்ளது. நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் என்றார்.