இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 20 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-25 18:45 GMT

கடலூர்:

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராடடம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட மாவட்ட துணை செயலாளர் குளோப், நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன், ஒரு பெண் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்து, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.

விருத்தாசலம்

இதேபோல் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருத்தாசலம் வட்ட குழு சார்பில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் ராவணராஜன் தலைமையில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.

பண்ருட்டி

பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் பண்ருட்டி பயணியர் மாளிகையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் ரெயில் நிலையம் முன்பு வட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர், நிர்வாகிகள் லதா குமாரி, சித்ரா உள்ளிட்ட 18 பெண்கள் உள்பட 46 பேரை கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெண்ணாடம் வட்ட குழு சார்பில் நல்லூர் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் மாவட்ட நிர்வாக குழு சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னத்தம்பி, தேவா மற்றும் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று காலை பெண்ணாடம் ரெயில் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த திருச்சி ரெயில்வே உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் பெண்ணாடம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்